தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குழந்தைகள் முதல் அனைத்து வயதுப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் பி. கீதா ஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி. கீதா ஜீவன் கூறியதாவது: "தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே பிளஸ்-1 மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இளம் வயதில் காதல் விவகாரங்களில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகள் மிகுந்த கவலைக்குரியவை.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 30 நாட்களில் மட்டும் 16 கொலைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு கொலைதான் அதிகம் அல்லது குறைவு எனப் புள்ளிவிவரங்களைக் கூறிப் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டும் போக்கு நிலவுகிறது; இது ஏற்புடையதல்ல."

"தமிழகத்தில் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் குறைந்துவிட்டது. காவல்துறையினர் தங்களது கடமையைச் சரிவரச் செய்யாமல், பிரச்சினைகளைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தினர் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் மாவட்ட ஆட்சியரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதும், அவர்களின் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமல் விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது. பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசும் அரசு, பெண்களை மதிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் செயல்பட வேண்டும். குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் - ஒழுங்கை அரசு நிலைநாட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.