தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 வயது பூர்த்தியடைந்து 15 வயதை எட்டாத பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி இலவசமாகப் போடப்பட்டு வருகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது: "தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் Quadrivalent HPV தடுப்பூசி, பெற்றோரின் முழு ஒப்புதலுடன் இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்தடுப்பூசி அரசு சுகாதார நிலையங்களில், பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் செலுத்தப்படுகிறது. தடுப்பூசி பெறும் பயனாளிகளின் விவரங்கள் 'U-WIN' இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 14 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் இத்தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று மட்டும் 3 சுகாதார நிலையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 184 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகராட்சி முழுவதும் மொத்தம் 4,482 பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 33% இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது.

மீதமுள்ள பெண் குழந்தைகளைப் பள்ளிகள் மூலமாகக் கண்டறிந்து, மாநகராட்சி, பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக் குழுக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள எந்தவொரு பெண் குழந்தையும் விடுபடாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோருக்கு வேண்டுகோள்:

எனவே, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள அரசு சுகாதார நிலையங்களை உடனடியாக அணுகி இத்தடுப்பூசியின் பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.