தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகள் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் பாத்திமா நகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46-வது வார்டு பாத்திமா நகர் பகுதியில் நீண்ட காலமாகக் கழிவுநீர் தேங்கி நிற்பதோடு, குப்பைக் கழிவுகள், முட்புதர்கள் மற்றும் செடிகள் மண்டிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லை அதிகரித்துப் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைச் சுத்தப்படுத்திச் சாக்கடைக் கழிவுநீர் தேங்காத வண்ணம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மாநகராட்சியின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் சுகாதாரச் சீர்கேடு மிகுந்த பாத்திமா நகர் 6-வது தெரு கிழக்குப் பகுதியில் மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாத்திமா நகர் பகுதி பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதால் தொடர் போராட்டத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

எனினும், இன்னும் சில தினங்களில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பாத்திமா நகர் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் கூறியதாவது: "பாத்திமா நகர் மக்கள் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் நாள்தோறும் படும் அவதிகளைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர் நல அலுவலர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தால்தான் இப்பகுதி மக்களின் வேதனை புரியும்.

எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தால், விரைவில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.