தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று மாலை வருகை தந்த பொது சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'Summit Facilities Limited' நிறுவனத்தின் மூலம் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணிநிலை மற்றும் கோரிக்கைகள் குறித்து சிஐடியு (CITU) தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் அமைச்சரிடம் நேரில் மனு வழங்கப்பட்டது.

முக்கியக் கோரிக்கைகள்:

• தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.832 வழங்கப்படுவதற்குப் பதிலாக, குறைந்த அளவே வழங்கப்படுவதைத் திருத்தி அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.

• தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் EPF, ESI தொகைகள் மற்றும் நிர்வாகம் செலுத்த வேண்டிய தொகைகள் முறையாகச் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

• தேசிய விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களுக்கான ஊதியம் வழங்குவதுடன், இந்த ஆண்டில் வேலை செய்த பண்டிகை மற்றும் தேசிய விடுமுறை நாட்களுக்குரிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

• ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச போனஸ் தொகையைத் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும்.

சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து, மாவட்ட நிர்வாகி கே. காசி, மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட கன்வீனர் கே. சங்கரன் மற்றும் தாமோதரன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.