தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு என்பது கிடையாது. தொடர் கொலைகள் காரணமாகத் தூத்துக்குடி 'முத்து நகரம்' என்பது போய் 'குத்து நகரமாக' மாறிவிட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில் தேசத்துரோகமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வரவுள்ளது. இதற்காக நேரில் ஆஜராக விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியது :"தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு என்பது கிடையாது. தொடர் கொலைகள் காரணமாகத் தூத்துக்குடி 'முத்து நகரம்' என்பது போய் 'குத்து நகரமாக' மாறிவிட்டது. மாநிலத்தில் நடப்பவை அனைத்திற்கும் 'வெற்றிக் கொலை', 'வெற்றித் திருட்டு', 'வெற்றுப் பயணம்' என்றுதான் பெயர் வைக்க வேண்டும்."

திமுக ஒரு கருமம் என்றால், தவெக ஒரு கொடிய கருமம். தமிழகத்தில் நடப்பது வெற்றிப் பயணம் கிடையாது, வெற்றுப் பயணம். எங்களைப் பார்த்து ஜீரோ கட்சி என்கிறார்கள்; ஆனால் எப்போதும் எங்களைப் பற்றியே பேசுகிறார்கள். அந்த பயம் அவர்களுக்கு இருக்கட்டும். பைத்தியக் கூட்டத்திற்குப் பைத்தியத்தைப் பார்த்தால் பயம் வராது, வைத்தியரைப் பார்த்தால்தான் பயம் வரும்.

தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவில் பிடிபட்டு ரூ.4 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டும் போது பிடிக்காதவர்கள், தமிழ் மீனவர்களை மட்டும் பிடிக்கிறார்கள். இங்கு பிரச்சனை மீனவன் என்பதில் இல்லை, தமிழன் என்பதில் தான் உள்ளது."

காவிரியில் நுரையாக வருவது சாயக்கழிவு நச்சு. அதை சோப்பு, ஷாம்பு என்று அமைச்சர் கூறுவது அறியாமை. ரூ.1,000, ரூ.2,000 தருகிறோம் என்று வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்ததே குற்றம்தான். பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்குக் கேக் வாங்க ரூ.7.5 கோடி ஒதுக்கியதாகக் கூறுவது வெற்று அறிவிப்பு.

நீட் தேர்வுக்கு வரும் மாணவிகளிடம் சின்ன மூக்குத்திக்குள் பிட் கொண்டு செல்ல முடியும் என்று கழற்றச் சொல்கிறார்கள். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறாது என்கிறீர்களா? ஊழல் அதிகம் உள்ள இந்தியாவிலும் நைஜீரியாவிலும் தான் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது" என்று சீமான் கடுமையாகச் சாடினார்.