கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செவரக்கோடு வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் சசிகலா (47). இவர் கடந்த 30-ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செவரக்கோடு பகுதியில், ஆற்றூர் கல்லுப்பாலத்தைச் சேர்ந்த வினோ (18) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சசிகலா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சசிகலாவுக்குக் கால் மற்றும் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டன. அதேவேளையில், பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட வினோவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வினோ பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த வினோ, குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்துத் திருவட்டார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.