கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பாரம்பரிய நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியக் கோயில்களில் இருந்து சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
அதன்படி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலக் காவல்துறையினர் சார்பில் துப்பாக்கி ஏந்திச் சிறப்பான அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கேரள காவல்துறையின் பிரத்யேக வாத்திய இசை முழங்க அம்மனுக்குப் பூரண கும்ப மரியாதையுடனும், சிறப்பான வாத்திய வரவேற்புடனும் வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களின் தொன்மையான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிக நல்லுறவை எக்காலமும் பறைசாற்றும் விதமாக அமைந்த இந்நிகழ்வில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

