தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - மதுரை முதன்மைச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த விஜய முத்துபாண்டியன் (ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்). இவரது மனைவி சிவகாமி. இவர்களது 2 மகன்களும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், சிவகாமி கயத்தாறில் தனியாக வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான திருமண மண்டபம் மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டுப் பராமரித்து வருகிறார்.
நேற்று மாலையில் திருமண மண்டப வாடகைத் தொகையான ரூ. 2.10 லட்சத்தைச் சிவகாமியிடம் ஒருவா் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைத் தனது வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துப் பூட்டிய சிவகாமி, அதில் ஏற்கெனவே வைத்திருந்த 5¾ பவுன் நகைகளுடன் சேர்த்துப் பூட்டிவிட்டு, சாவியை மறைவிடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தபோது, அலமாரி திறக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 2.10 லட்சம் ரொக்கம் மற்றும் 5¾ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பறிபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த சிவகாமி உடனடியாகக் கயத்தாறு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிவகாமி வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர் நைசாக வீட்டிற்குள் புகுந்து நகையையும் பணத்தையும் திருடிச் சென்றது உறுதியானது.
தொடர் விசாரணையில், இக்கொள்ளையில் ஈடுபட்டவர் கடம்பூர் அருகே உள்ள ஓணமாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவகுமார் (26) என்பதும், இவர் கயத்தாறு வடக்குத் தெருவைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்து மனைவியின் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 5¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.10 லட்சம் ரொக்கப் பணத்தைப் பத்திரமாக மீட்டனர்.

