திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று (சனிக்கிழமை, நவம்பர் 21) மஞ்சள் நீராட்டு வைபவம் மற்றும் சுவாமி - அம்மன் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றுத் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து 16-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 17-ஆம் தேதி சுவாமி மற்றும் அம்மன் பட்டினப் பிரவேசமும் நடைபெற்றன. தொடர்ந்து நவம்பர் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று (நவம்பர் 21) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டன.
மாலையில் மஞ்சள் நீராட்டு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் தெய்வானை அம்மன் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி மற்றும் அம்மன் மீண்டும் திருக்கோயிலைச் சென்றடைந்ததும், நிகழாண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இனிதே நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

