திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) இரவு கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது; இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு விஸ்வரூபமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், பின்னர் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றன.
மாலையில் கோயில் உள்பிரகாரத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்துச் சுவாமி சந்நிதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முக விலாசத்தில் எழுந்தருளினார். இரவு 6.55 மணியளவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

