தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் அன்றும், திருக்கல்யாண நிகழ்வு 16-ஆம் அன்றும் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவிற்காக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மணிமுத்தாறு சிறப்புப் படைகள் உள்ளிட்ட 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில், 16 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 49 உதவி/துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 139 காவல் ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 4,100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவில் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 30 கண்காணிப்பு கோபுரங்கள், 46 ஒலிபெருக்கி வசதிகள், 1,000 பேரிகார்டுகள், 105 தற்காலிக சிசிடிவி கேமராக்கள் மற்றும் 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர வான்வழிக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தினமும் 200 ஆண் மற்றும் பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

சூரசம்ஹார நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த விரும்புவோர் காவல்துறையினரிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்களைக் கொண்ட உடைகள், தொப்பிகள், கொடிகள் மற்றும் ரிப்பன்களை அணிந்து வரக்கூடாது. சாதி ரீதியான கோஷங்கள், பாடல்கள் மற்றும் வசனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்ப்பக் காவடி எடுத்து வருவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை.

சூரசம்ஹார நிகழ்வின்போது கடற்கரைப் பகுதிக்குள் காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் எளிதாகக் காணும் வகையில் கடற்கரைப் பகுதியில் 26 எல்.இ.டி. திரைகள் மூலம் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது உரிமை கோரப்படாத பொருட்களோ தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கலாம். திருவிழாவின் அமைதிக்கும் பொது ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.