சாத்தான்குளத்தைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் கங்காதரன் (34), அப்பகுதியின் கடைவீதியில் டீக்கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் இவரது டீக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தைத் திருடிக் கொண்டு அங்கிருந்த சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கங்காதரன், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்ம நபர் பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இது குறித்துக் கங்காதரன் உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், டீக்கடையில் பணம் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது.

சமூக வலைதளங்களில் வைரலான சிசிடிவி காட்சியைக் கண்டு விழிப்புற்ற சாத்தான்குளம் வர்த்தக சங்கத்தினர், கடையில் பணம் திருடிச் சென்ற நபரை அடையாளம் கண்டு அவரைப் பிடித்துச் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கைதான நபர் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த ஜெபமணி மகன் ஜேக்கப் (50) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய சைக்கிள், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருடப்பட்ட சைக்கிள் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருடப்பட்ட சைக்கிளைப் பறிமுதல் செய்த சாத்தான்குளம் போலீசார், ஜேக்கப் மீது வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.