கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சட்டீஸ்கரைச் சேர்ந்த தொழிலாளி ஜெயந்த் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலைத் தொடர்பாகக் கொல்லப்பட்டவரின் செல்போன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாகி ஒடிசாவில் பதுங்கியிருந்த தர்மானந்தா (32) என்பவர் ஏற்கெனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இக்கொலை வழக்கில் மகேஸ்வர் மாலிக் (37) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம் மதனபூரில் பதுங்கியிருந்த மகேஸ்வர் மாலிக்கைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடிச் சென்று கைது செய்தனர். பின்னர் அவரை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.