வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட பெரும் கலவரத்தைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், அவர் வரும் டிசம்பரில் மீண்டும் வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
வங்கதேசம் திரும்புவதற்காகப் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேசத் தூதரகத்திற்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவருக்குப் புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது என்றும், நீதிமன்றத்தால் தேடப்படும் அவரை இந்தியா முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த நாட்டு அரசு வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு வங்கதேச அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "வங்கதேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவுக்குப் புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது.
குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு தங்களை முறைப்படி ஒப்படைக்க வேண்டும். இந்த நடைமுறையின் மூலம் மட்டுமே அவர் வங்கதேசத்திற்குத் திரும்ப முடியும். அவர் வங்கதேசத்திற்குத் திரும்பினால் நிச்சயம் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

