கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள உத்திரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பச் சூழ்நிலை மற்றும் பொருளாதாரத் தேவை காரணமாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள அபா நகருக்கு டிரைவர் வேலைக்குச் சென்றார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரிகள், சவுதி அரேபியாவில் வசிக்கும் தெரிந்த நபர் ஒருவர் மூலம் விசாரித்துள்ளனர். அப்போது, சந்தோஷ் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டு அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சந்தோஷின் இறப்புக்கான காரணம் குறித்து சவுதி அரேபியா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் உயிரிழந்த சந்தோஷின் உடலை விரைந்து மீட்டுச் சொந்த ஊரான உத்திரங்கோட்டிற்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.