குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது - இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்குரியது.
14 ஆண்டுகளாக ஆனால் போக்குவரத்து துறையான ஆட்டோ, டாக்சி நடத்துபவர்கள் 14 ஆண்டுகாலமாக தங்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த வாடகை கட்டணத்தை உயர்த்தாத காரணத்தினால் கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனை தவிர்க்க இந்தியாவில் ஏனைய பெரிய மாநகரங்களில் உள்ளது போன்று அனைத்து ஆட்டோ, டாக்சிகளும் உடனடியாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைந்து மத்திய அரசு ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் கட்டணம் நிர்ணயம் செய்திருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் உடனடியாக அதே கட்டணத்தை வசூலிக்கவும் செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு செயல்படுவதை தற்பொழுது அனைவரிடமும் (செல்போன்) கைப்பேசி உள்ளதால் அனைவரும் டிஜிட்டல் உலகத்தை ஏற்று அதன்படியே கட்டணம் வசூலிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வேண்டுகிறோம்.
இதன் மூலம் மேற்படி ஆட்டோ, டாக்சிகள் யார் வாகனத்தை ஓட்டுகிறார்கள் அவர்கள் பெயர் முகவரி தொலைபேசி உடன் தெரிந்து கொள்வதுடன், தாங்கள் எந்த ஊருக்கு, எந்த வழியாக செல்கின்றது என்பதையும் அதற்குரிய கட்டணத்தை டிஜிட்டல் செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம். இது போன்ற அனைத்து வசதிகளும் கைபேசி வழியே தெரிய வருவதால் டிரைவர்கள் தவறு செய்வதற்கும், கூடுதல் கட்டணம் மக்களிடம் வசூல் செய்பவர்களுக்கும் வழி இல்லாமல் போய்விடும் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஆதலால் மேற்படி டிஜிட்டல் திட்டத்தை உடனடியாக தமிழகத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என தமது தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழக தலைமை செயலாளர், போக்குவரத்து செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

