கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரத்தில் நாகர்கோவில் சந்திப்பு (Nagercoil Junction) மற்றும் நாகர்கோவில் டவுன் (Nagercoil Town) ஆகிய இரண்டு முக்கிய ரயில் நிலையங்கள் வழியே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் மதுரை, திருநெல்வேலி வழியே நாகர்கோவில் வந்து, கேரளா மார்க்கமாகச் செல்லும் பல முக்கிய தினசரி ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. அவற்றுள்:

திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ்

மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ்

ஆகிய 4 தினசரி ரயில்களும்; மேலும் திருநெல்வேலி – காந்திதாம் வாராந்திர ரயில், திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில், திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர ரயில் ஆகிய 3 வாராந்திர ரயில்களும் இந்நிலையம் வழியாகச் சென்று வருகின்றன.

மங்களூர் போன்று முனைய ரயில் நிலையமாக மாற்ற கோரிக்கை:

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரு முனைய ரயில் நிலையங்கள் (Terminal Stations) செயல்பட்டு வருகின்றன. (முனைய ரயில் நிலையம் என்பது ரயில்கள் தங்களது பயணத்தைத் தொடங்கும் அல்லது நிறைவு செய்யும் நிலையமாகும்).

கர்நாடக மாநிலம் மங்களூரில், பிட்லைன் (Pit-line) பராமரிப்பு தேவைப்படும் ரயில்கள் மங்களூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்தும், பிட்லைன் பராமரிப்பு இல்லாத ரயில்கள் மங்களூர் சந்திப்பு நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.

மங்களுர் போன்று எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் டவுன் என்று இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. அதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுவரும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை மேம்படுத்தி, கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, முனைய ரயில் நிலையமாக மாற்றம் செய்ய வேண்டும். முதற்கட்டமாக, சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை இங்கிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய கோரிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு அம்சங்கள்:

1. கூடுதல் நடைமேடைகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கம்:

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் ரயில் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமேடைகளுடன் 2 கூடுதல் நடைமேடைகளை அமைத்து, மொத்த நடைமேடைகளின் எண்ணிக்கையை 5-ஆக உயர்த்த வேண்டும். முதற்கட்டமாக, பரிசோதனை அடிப்படையில் சிறப்பு ரயில் சேவைகளை இங்கிருந்து தொடங்க வேண்டும். பின்னர் பராமரிப்பு தேவையில்லாத/குறைந்த ரயில்களை படிப்படியாக இந்நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நாகர்கோவில் சந்திப்பு விரிவாக்கப் பணிகளின் போது மாற்று ஏற்பாடு:

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் கடைசிகட்ட விரிவாக்கப் பணிகளுக்காகப் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படவோ அல்லது திருநெல்வேலியுடன் பகுதியளவாக நிறுத்தி வைக்கப்படவோ (Short terminated) திட்டமிடப்பட்டுள்ளன. (கடந்த ஆண்டு நாகர்கோவில் - தாம்பரம் அந்தோதையா ரயில் ஒரு மாத காலம் [22-06-2025 முதல் 22-07-2025 வரை] திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது).

இவ்வாறாக ரயில்களைத் திருநெல்வேலியோடு நிறுத்துவதற்குப் பதிலாக, பரிசோதனை முறையில் பராமரிப்பு தேவையில்லாத ரயில்களை நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

3. குடிநீர் விநியோக கட்டமைப்பு (Water Hydrant System):

ரயில் பயணிகள் மற்றும் நீண்ட தூர ரயில்களின் வசதிக்காக, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளிலும் ரயில் பெட்டிகளில் குடிநீர் நிரப்பும் கட்டமைப்பை (Water Hydrant System) உடனடியாக நிறுவ வேண்டும்.

4. பைபாஸ் வளைவு சீரமைப்பு மற்றும் வேகக் கட்டுப்பாடு நீக்கம்:

நாகர்கோவில் டவுன் - ஆரல்வாய்மொழி இடையே புதிதாக முடிக்கப்பட்ட இரட்டைப் பாதையின் பைபாஸ் பகுதியில் உள்ள கூர்மையான வளைவு காரணமாக, ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. இது திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களின் பயண நேரத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும், விழிஞ்சம் சர்வதேசத் துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, ஒழுகினசேரி மேம்பாலப் பகுதியிலிருந்து திருநெல்வேலி செல்லும் இருப்புப்பாதையை தோவாளை ரயில் நிலையத்துடன் நேரடியாக இணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பைபாஸ் பகுதியில் ரயில்களை மணிக்குப் 80 முதல் 100 கி.மீ வேகத்தில் தடையின்றி இயக்க முடியும்.

5. எதிர்கால விரிவாக்கம் மற்றும் நான்கு வழிச்சாலை இணைப்பு:

நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையேயான 3-வது ரயில் பாதை திட்டப்பணிகள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை முன்னிட்டு, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் எதிர்கால தேவைகளுக்காகக் கூடுதல் அடிப்படை வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்:

நாகர்கோவில் – திருவனந்தபுரம் மூன்றாவது பாதை திட்டத்pன் கீழ் கூடுதல் 5 நடைமேடைகள் ( மொத்தம் 10) மற்றும் காலி ரயில் பெட்டிகளை நிறுத்தி வைப்பதற்கான 10 ஸ்டேபிளிங் லைன்கள் (Stabling Lines) அமைக்கப்பட வேண்டும்.

ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியை நான்கு வழிச்சாலையுடன் (4-lane road) இணைத்து, புதிய பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம் (Ticket Booking Counter), பரந்த வாகன நிறுத்துமிடம் (Parking Area) போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

உள்ளூர் மக்களின் நீண்டகாலப் பயண வசதியையும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் இக்கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனப் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.