பெங்களூரு சிக்பேட்டையைச் சேர்ந்த சங்கர் ஆறுமுகம் (42) என்பவர், கடந்த 2001-ம் ஆண்டு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுப் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மேல்முறையீட்டு மனுக்களைக் கர்நாடக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சங்கர் ஆறுமுகத்தை விடுவித்ததாகப் போலியான தீர்ப்பு நகல் தயாரித்துச் சிறையில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது சிறைக் கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், அதனை ஏற்றுக்கொண்டு சங்கர் ஆறுமுகத்தை 2018 நவம்பர் 13-ம் தேதி சிறையிலிருந்து விடுவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு இது குறித்துச் சிறைத்துறை டி.ஜி.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டும் விசாரணை நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய சிறைத்துறை டி.ஜி.பி-யாகப் பொறுப்பேற்ற அலோக் குமார், இப்புகார் மீது தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணையில், சிறையின் தலைமைக்காவலர் ஸ்ரீகாந்த் போலியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகலைத் தயாரிக்க உதவியதும், கண்காணிப்பாளர் சோமசேகருக்கு உண்மை தெரிந்தே மோசடியாகக் கைதியை விடுவித்ததும் உறுதியானது.
தொடர்ந்து சங்கர் ஆறுமுகத்தின் மனைவியிடம் நடத்திய விசாரணையில், கணவரை விடுவிக்கச் சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகருக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், சோமசேகர் தன்னுடன் பாலியல் ரீதியாகத் தகாத உறவில் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றி வந்த சோமசேகரை காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் விடுவிக்கப்பட்ட கைதி சங்கர் ஆறுமுகம் மற்றும் தலைமைக்காவலர் ஸ்ரீகாந்த் ஆகியோரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

