கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 17 வயது பிளஸ்-1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி 144 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டையைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவிக்கும், அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஜெனிஷ் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. காதல் ஆசை வார்த்தைகளைக் கூறிய ஜெனிஷ், அந்த மாணவி தங்கியிருந்த பெரியம்மா வீட்டில் இருந்த 144 பவுன் நகைகளைப் பெற்று மோசடி செய்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெனிஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடமிருந்து 60 பவுன் நகைகளை மீட்டனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி ஜெபிஷையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியிடம் மோசடி செய்யப்பட்ட நகைகளில் 40 பவுன் நகைகளை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்ததாக ஜெபிஷ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மார்த்தாண்டத்தில் நகைக்கடை நடத்தி வரும் உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்த லாலி (48) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஜெபிஷிடம் இருந்து 40 பவுன் நகைகளை லாலி பெற்றது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த நகைகளை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக லாலியை போலீசார் கைது செய்தனர். ஜெபிஷிடம் வாங்கிய நகைகளை லாலி என்ன செய்தார் என்பது குறித்தும், மீதமுள்ள 44 பவுன் நகைகள் மற்றும் பணத்தைக் கைப்பற்றுவது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

