தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து இந்தியிலும், 3-வதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங் களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெரியளவில் எழுத்துகள் இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநில அரசு வைத்த பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கடும் எதிர்ப்பையடுத்து சாலை வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.