நாகர்கோவில் மாநகராட்சியில் 5- நாட்களாக சாலையின் குறுக்கே நிற்கும் ஜே.சி.பி.வாகனத்தால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட மேலப்பெருவிளை பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரம் திடீரென பழுதடைந்து பிரதான சாலையின் நடுவே நின்றது.
இந்த சாலைஆசாரிபள்ளம் to பார்வதிபுரம் இணைக்கும் பிரதான சாலையாக மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பழுதடைந்து 5- நாட்களாகியும் ஜே.சி.பி. எந்திரத்தை அப்புறப்படுத்தவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையின் குறுக்கே ஜே.சி.பி. எந்திரம் நிற்பதால் மினி பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
5- நாட்களாகியும் பழுதடைந்த எந்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரத்தை அப்புறப்படுத்தி, சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

