கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் நாகர்கொவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சீராகச் செல்வதை உறுதி செய்யவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும் மழைநீர் வடிகால் ஓடைகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்ஒருபகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாறைகால்மடம் பகுதியில் செல்லும் பறக்கின்கால்வாய், எஸ்.எம்.ஆர்.வி பள்ளியின் அருகில் செல்லும் காங்கேயன் கால்வாய் உள்ளிட்டவைகள் தூர்வாரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்வாய்களில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, மழைநீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், வடகிழக்குப் பருவமழையின்போது மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக எந்ததெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறதோ அப்பகுதிகளில் மீட்புபணிகளை துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதிசெய்ய துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் அதிகம் சேதங்கள் ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளிலும் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பேரிடர் காலங்களில் மாவட்டத்திற்குட்பட்ட ஆற்றுப்படுகைகள், கால்வாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீர்படுத்தி, அவ்வப்போது கண்காணித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என்று அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரன்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, மாதவன், பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.