நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்சோ வழக்குக் கைதி ஒருவர், கழிவறைக்குச் செல்வதாகக் கூறிப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை ஏமாற்றித் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (36). இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது சிறுமிக்குத் தொல்லை அளித்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள வார்டில் கடந்த ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வார்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஸ்டீபன் ராஜ் கூறியுள்ளார். அதன்பேரில், காவலர்கள் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பி எதிர்பாராதவிதமாக ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலாளிகள் உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் அவரைப் பிடிக்க முடியவில்லை. கைதி தப்பியோடிய சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பில் இருந்த போக்சோ கைதி தப்பியோடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.