கர்நாடகாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது மைசூரு தசரா விழாவாகும். இந்த ஆண்டு தசரா விழாவால் மைசூரு நகரே மக்கள் கூட்டத்தால் கடந்த 10 நாட்களாகத் திக்குமுக்காடியது. இத்தகைய கோலாகலமான விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி எனும் தசரா ஊர்வலம் நேற்று மாலையில் நடைபெற்றது.

இதையொட்டி, சாமுண்டி மலையிலிருந்து உற்சவ மூர்த்தியான சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கார ஊர்தியில் ஊர்வலமாக நேற்று காலை 10 மணிக்கு மைசூரு அரண்மனைக்கு எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மலர்களைத் தூவிச் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

யானைகள் அணிவகுப்பு: அரண்மனை வளாகத்தில் 66 கலைக்குழுவினரின் ஊர்வலம் மற்றும் 53 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. கலாச்சாரம் மற்றும் அலங்கார வண்டிகளின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை முதல்முறையாகச் சுமக்கும் பிரசாந்தா உள்பட ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதனத் தொடர்ந்து சரியாக மாலை 3.40 மணிக்கு 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை கிரேன் உதவியுடன் பிரசாந்தா யானை மீது ஏற்றி பாதுகாப்பாகக் கட்டப்பட்டது. அதன்ப பின்னர் தங்க அம்பாரியில் பச்சை நிற பட்டு உடுத்தி சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். பிரசாந்தா யானை தங்க அம்பாரியைச் சுமந்து கம்பீரநடைபோட்டு, யானைகள் புடைசூழச் செல்ல, அதனைத் தொடர்ந்து மற்ற யானைகள் அணிவகுத்துச் சென்றன.

அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடை முன்பு பிரசாந்தையானை சுமந்தபடி நின்றது. அதனைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்க சிலைக்கு முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரளம் முதல்-அமைச்சர் வி.டி.சதீசன், மன்னர் யதுவீர் எம்.பி., ஆகியோர் மாலை 4.29 மணி அளவில் மலர்கள் தூவி அம்மனை கும்பிட்டு வணங்கி ஜம்புசவாரி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.

சாமுண்டீஸ்வரி அம்மனுடன் தங்க அம்பாரியைச் சுமந்து கொண்டு பிரசாந்தா யானை பன்னிமண்டபம் அருகே உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தை இரவு 7 மணிக்கு வந்தடைந்தது.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தைக் காண நேற்று மைசூரு அரண்மனை முன்பு லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் காயம் அடைந்தனர்.