தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்துள்ள எம். கோட்டூர் விலக்கு அருகே நேற்று (நவம்பர் 21) குளோரின் அமிலம் ஏற்றி வந்த லாரியும், இலைக் கட்டுகளை ஏற்றிச் சென்ற லோடு வேனும் மோதிக்கொண்ட விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளி சிவலிங்கம் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரையிலிருந்து குளோரின் அமிலம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதேபோல், தூத்துக்குடியிலிருந்து இலைக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லோடு வேன் ஒன்று மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

நேற்று (சனிக்கிழமை) தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்துள்ள எம். கோட்டூர் விலக்கு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக இவ்விரு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் லோடு வேனில் பயணித்த தொழிலாளியான தூத்துக்குடி சிதம்பர நகர் 1-ஆவது தெருவைச் சேர்ந்த சிவலிங்கம் (35) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் லாரி ஓட்டுநரான ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் திலீபன் (36) பலத்த காயமடைந்தார். விபத்து குறித்துத் தகவலறிந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சிவலிங்கத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த திலீபனைத் தீவிர சிகிச்சைக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.