கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் சார்பில் திருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் பியூலா தங்கரத்தினம் தலைமையிலான காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாளிகளில் போலி பெயிண்ட் நிரப்பப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போலி பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பிரவீண், மணிகண்டன் மற்றும் அஜின்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து போலி பெயிண்ட் வாளிகள் உட்பட சுமார் ரூ.75,000 மதிப்பிலான பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
இதுபோன்று சந்தையில் போலிப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 044-28511587 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

