நாகர்கோவிலில் வாகனத் தணிக்கையின் போது குடிபோதையில் காரை ஓட்டி வந்த கல்லூரி ஆசிரியர் சப்-இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் கடந்த 18-ஆம் தேதி இரவு வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் சந்திப்பில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் காரை ஓட்டி வந்த நாகர்கோவில் கிறிஸ்டோபர் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியரான சாமுவேல் (35) என்பவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போக்குவரத்து விதிமுறைப்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காகச் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வழக்கு பதிவு செய்தார். அப்போது சாமுவேல் போலீசாரிடம் தகராறு செய்து, தான் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்குப் போலீசார், போதையில் கார் ஓட்ட அனுமதிக்க முடியாது என்றும், வேறு நபரை வரவழைத்துக் காரில் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
அந்த சமயத்தில் காருக்குள்ளேயே இருந்த சாமுவேல் திடீரென வேகமாக காரை ஓட்டிக்கொண்டு வெட்டூர்ணிமடம் நோக்கிச் சென்றுள்ளார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அசோக் காரைப் பின்தொடர்ந்து சென்றார். கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே செல்லும்போது சப்-இன்ஸ்பெக்டர் காரை மடக்கியுள்ளார்.
அப்போது சாமுவேல் சப்-இன்ஸ்பெக்டர் மீது வேகமாக காரை மோதி கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பைக்கிலிருந்து அசோக் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்; இருப்பினும் பைக் சேதமடைந்தது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டரிடம், "என்னை பின்தொடர்ந்து வந்தால் கொன்று விடுவேன்" என மிரட்டிவிட்டு சாமுவேல் காரில் சென்றுள்ளார்.
மீண்டும் பின்தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வெட்டூர்ணிமடம் அருகே காரை மறித்தபோது, சாமுவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபோது சாமுவேல் காரில் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்துச் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, கல்லூரி ஆசிரியர் சாமுவேலைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 296 (பொது இடத்தில் ஆபாசமாக திட்டுவது), 132 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 109 (கொலை முயற்சி), 351(3) (மரண அச்சுறுத்தல் உண்டாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

