தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் படர்ந்தபுளி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் செல்வகுமார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி அந்தக் கோழிப் பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து செல்வகுமார் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இத்திருட்டுச் சம்பவத்தில் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மாரிமுத்து என்பவரின் மகன் பொன்ராஜ் (24) என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொன்ராஜை நேற்று (சனிக்கிழமை) கைது செய்த நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.