காவல் ஆய்வாளரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, அவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கிரீனிவாச பிரசாத் (50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற மற்றொரு வழக்கறிஞருக்கும் இடையே கடந்த 06.09.2011 அன்று தகராறு ஏற்பட்டது.

இது குறித்து செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில், சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் பீட்டர் பால்துரை வழக்குப்பதிவு செய்து கிரீனிவாச பிரசாத்தைக் கைது செய்வதற்காகச் சென்றார். அப்போது, ஆத்திரமடைந்த கிரீனிவாச பிரசாத் ஆய்வாளர் பீட்டர் பால்துரையை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசியதுடன், கையால் தாக்கிக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பீட்டர் பால்துரை அளித்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார் நேற்று பரபரப்புத் தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் கிரீனிவாச பிரசாத் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 12,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சகாதேவன் ஐயர் ஆஜராகி வாதாடினார்.