தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி காளீஸ்வரி (47). இவர்களது மகள் கார்த்திகாவுக்கும், நாமக்கல் மாவட்டம் கன்னூர்பட்டி கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (37) என்பவருக்கும் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் உள்ள வாராகி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ரஞ்சித்குமாருடன் நாமக்கல் சென்ற இரண்டே நாட்களில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கார்த்திகா கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் கோவில்பட்டிக்கு வந்துள்ளனர். சில நாட்கள் தாயுடன் தங்கியிருந்து அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கார்த்திகா கூறியதால், மருத்துவச் செலவுக்காக ரூ.2.50 லட்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு ரஞ்சித்குமார் நாமக்கல்லுக்குத் திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், ஒரு வாரமாக மனைவி கார்த்திகாவிடமிருந்து எந்தத் தொலைபேசி அழைப்பும் வராததோடு, ரஞ்சித்குமார் தொடர்பு கொண்டபோதும் முறையான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் உப்பண்டார்பட்டியைச் சேர்ந்த சித்தார்த்தன் (36) என்பவர் ரஞ்சித்குமாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கார்த்திகாவைத் தான்தான் முதலில் திருமணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் கோவில்பட்டியில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்கு நேற்று (சனிக்கிழமை) நேரில் சென்று அவரது தாய் காளீஸ்வரியிடம் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திகா தனது தாய் காளீஸ்வரி மற்றும் தந்தை மாரியப்பன் ஆகியோரின் உதவியுடன் சித்தார்த்தன், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் ஏமாற்றி அடுத்தடுத்துத் திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு போலீசார், காளீஸ்வரியைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திகா மற்றும் அவரது தந்தை மாரியப்பன் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.