ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்ததாவது: "இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தின் காரணமாகப் பனிப்பாறைகள் உருகுதல், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட கடும் பேரிடர் அபாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்புடன், நேபாள தலைமையில் 'இமயமலை காலநிலை மாற்ற செயல்திட்டத்தை' உருவாக்க விரும்புகிறேன்.

இச் செயல்திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிக்கவும், கூட்டு முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தவும் இது பெரிதும் உதவும்."

தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய விநியோக அமைப்பில் நிலவும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார். "போருக்கான ஆயுதங்கள் உலக எல்லைகளைக் கடந்து மிகவும் வேகமாகச் சென்றடைகின்றன. ஆனால், ஏழை விவசாயிகளுக்குத் தேவையான உரம், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன" எனச் சாடினார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட கொடூரப் பேரிடரில் இதுவரை 1,452 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,700 முதல் 6,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அவர் தனது உரையின் போது மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார்.