எஸ்.ஜி.ஆர். விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கத் தயாரா என்றும் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம் மேற்கொள்ளும் பணி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாடு உட்பட 20 மாநிலங்களில் இந்தப் பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள மாநிலங்களில் தற்போது சிறப்புத் திருத்தம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 13 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்தவர்கள் என்றும், இடம் பெயர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஆனால் 2 தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகக் கடும் விதிகளைச் சேர்த்ததால் ஏராளமானோர் நீக்கப்பட்டதாகவும், புதிய வாக்காளர்களைச் சேர்க்க முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி 'மக்கள் மன்றம்' என்ற பெயரில் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஞானேஷ்குமார் விவகாரத்தில் ராகுலுக்கும் அகிலேஷுக்கும் அமித்ஷா சவால் விடுத்துள்ளார். "எஸ்.ஜி.ஆர். விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கத் தயார்.
ஆனால் அப்படி சிறப்புக் கூட்டம் கூட்டுவதற்கு ராகுலும் அகிலேஷும் சம்மதிக்க மாட்டார்கள்" என்று அமித்ஷா கடுமையாகச் சாடியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது, ஆதாரமற்றது என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

