‘எம்டி ஆன் பீஸ்’ (MT On Peace) என்ற வர்த்தகக் கப்பல் நேற்று திங்கள்கிழமை ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ஏவுகணை அல்லது வெடிகுண்டு போன்ற எறிபொருளால் திடீரெனத் தாக்கப்பட்டது.
இச் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: "ஓமன் அருகே ஹார்முஸ் நீரிணையில் 'எம்டி ஆன் பீஸ்' கப்பல் மீதான தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த 19 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் 11 இந்தியர்கள் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஓமன் அதிகாரிகளின் விரைவான உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் கசாப் (Khasab) நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிய நேரத்தில் மதிப்புமிக்க உதவிகளை வழங்கிய ஓமன் அதிகாரிகளுக்குத் இந்திய அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது"* என்றார்.
மேலும் பேசிய அவர், "இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில், கப்பல்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். சர்வதேசக் கடல் வழிகளில் கப்பல் போக்குவரத்தும் வர்த்தக நடவடிக்கைகளும் தடையின்றி இயல்பாக நடைபெற வேண்டும்" என வலியுறுத்தினார்.

