கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (43). பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது மனைவி பாரதி (37), குமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி இணை செயலாளராக உள்ளார். இந்நிலையில், கணவரைக் கொன்ற வழக்கில் மனைவியும் அவரது சிறு வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22-ம் தேதி இரவு நேரத்தில் திடீரெனக் கணவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாரதி அவரை வடசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் இறந்துவிட்டதே உறுதி செய்யப்பட்டது.

இதன்பிறகு, யாருக்கும் தெரியாமல் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றபோது, பூதப்பாண்டி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் உடலைப் பார்வையிட்டபோது, கழுத்துப் பகுதியில் காயங்களும் தழும்புகளும் இருந்ததால் சந்தேகமடைந்தனர்.

உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயன்றபோது, பாரதி அழுது கூச்சலிட்டு, "போஸ்ட் மார்ட்டம் செய்தால் இங்கேயே தீக்குளித்துவிடுவேன்" என மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகம் மேலும் வலுக்க, காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்திப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

மருத்துவ அறிக்கையில், சுரேஷ் கயிறால் இறுக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, சம்பவம் நடந்த அன்று சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. "கரண்ட் போய்விட்டது" என பாரதி கூறியதை, வீட்டிலிருந்த இன்வெர்ட்டர் வசதியைக் சுட்டிக்காட்டி போலீசார் கேள்வி எழுப்பினர். "நான் ஏற்கனவே இன்வெர்ட்டரையும் ஆஃப் செய்துவிட்டேன்" என அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தது காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையினரின் தீவிர கிடுக்கிப்பிடி விசாரணைக்குப் பின் பாரதி உண்மையை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், "என் கணவருக்குக் குடிப்பழக்கம் உள்ளது. குடிபோதையில் இரவு நேரத்தில் செல்போனில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் துன்புறுத்துவார். உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்துக் கொடுமைப்படுத்தினார். இதனால் எனது 14 வயது மகனும் மனதளவில் பாதிக்கப்பட்டான். அதனால் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்தவரை, நானும் எனது மகனும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தோம்" எனத் தெரிவித்தார்.

இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தையடுத்து பாரதியையும், அவரது 14 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சுரேஷுக்கு 'மணிகண்டன்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர்மீது காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு தேரூர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சுரேஷ் முக்கியக் குற்றவாளியாவார். இதுதவிர இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.