நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்துள்ள 1,200 பக்க குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி கைதியான சபரிவர்மனை, சிறை வார்டன்களின் தூண்டுதலின் பேரில் சக கைதிகள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சபரிவர்மனிடம் இருந்த பையில் இருந்த அவரது சொந்த லுங்கியைக் கொண்டே கை கால்களைக் கட்டிப் போட்டு, அவரைச் சிறை வார்டன்களும் சில கைதிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்கிய பின்னர் அவரது கட்டுகளை அவிழ்க்காமல் அப்படியே விட்டுவிட்டதால், நீண்ட நேரம் தரையிலேயே அசைய முடியாமல் கிடந்த அவருக்கு நள்ளிரவில் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 3 சிறை வார்டன்கள் உட்பட மொத்தம் 11 பேருக்கு எதிராக நாகர்கோவில் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1,200 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.