» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்

ஞாயிறு 2, நவம்பர் 2025 10:40:47 AM (IST)



மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா நேற்று முன்தினம் தொடங்கி காலையில் இருந்து இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 2-வது நாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது சிவ பூத இசை வாத்தியங்களை இசைத்தபடி சிவனடியார்கள் வந்தனர். அதற்கு பின்னால் பெரியகோவிலின் மாதிரி தோற்றம் லாரியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அப்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் தேவாரம் பாடியபடி வந்தனர்.

அதன் பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு வில்வம், வன்னி இலை, அத்தி, அரச கொழுந்து, விபூதி, நவகவ்யம், திரவியப்பொடி, வாசனைப்பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், மாதுளை, ஆரஞ்சு, அன்னாசி, இளநீர், சந்தனம், பன்னீர், புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் பெருவுடையார்-பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 48 ஓதுவார்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து விழாவின் 2-வது நாளில் திருமுறை தேவார பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர நான்கு ராஜ வீதிகளிலும் நடந்தது. முன்னதாக கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory