» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!

சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)



விடுப்பட்ட பணிகளையும் அதிக கவனம் செலுத்தி எதிர்காலத்தில் நல்லபடியாக செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம் என்று நல்லூர் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் உள்ள சமுதாயநல கூடத்தில் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது:- திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் நடைபெறுகின்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்திருக்கின்ற அனைவருக்கும் வணக்கம். இந்த ஊராட்சியில், மொத்தமாக 2800 மக்கள் தொகை உள்ளன. 

இங்கு 876 வீடுகள் இருப்பதாகக் ஊராட்சிக் கணக்கெடுப்பில் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது குக்கிராமங்கள் உள்ளன. அந்தக் குக்கிராமங்களில், எல்லா வளர்ச்சித் திட்டங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா? எங்கேயாவது ஏதாவது அடிப்படைச் சிக்கல்கள் இருந்தால் அதைப் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஊராட்சியில் என்னென்ன வேலைகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், அது பற்றிய உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம். குறிப்பாக, குடிநீர் இணைப்புகள் என்று குறிப்பிடுகையில் நமது ஊராட்சியில், 876 வீடுகளில் 215 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 520 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் 729 குடும்பங்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து வேலைக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கை 152 பேர் என்று குறிப்பிடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் 3 நபர்கள் உட்பட 100 நாள் வேலைக்கு வருகிறார்கள். 

ஒரு நாளைக்கு சராசரி ஊதியமாக 280 ரூபாய் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் 10 வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அதில் ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்டது. மீதமுள்ள ஒன்பது வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் மறு கட்டுமான திட்டத்தின்படி, ஏற்கனவே கட்டியிருக்கக்கூடிய வீடுகளில், திரும்ப மறு கட்டுமானம் செய்தல் என்ற அடிப்படையில் 3 பழைய வீடுகளை மறு கட்டுமானம் செய்திருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, நாககன்னியபுரம் என்ற ஊரில் ஒரு பேருந்து பயணியர் நிழலகம் கட்டி வருகிறார்கள். இது தவிர 2024-25-ல் சில பணிகள் எல்லாம் எடுத்துச் செய்திருக்கிறார்கள். இந்த பணிகள் பற்றியும், இதில் என்ன சரியாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லலாம். கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகில் ஒரு கழிவறை வசதி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிவறைக்கான தண்ணீர் வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சாஸ்தா கோயில் என்ற இடத்தில் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதேப்போல், நல்லூர் வடக்குத் தெருவிலும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நல்லூர் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தின் அருகில் ரூ. 1 இலட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை வசதிகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அது முடிவடையும் தருவாயில் உள்ளது. கொளையகநாதபுரம் ஊரில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி ரூ.5,70,000 செலவில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணிகள் எல்லாம் 2024-25-ல் நிதிக்குழுமானிய நிதியிலிருந்து கட்டப்படக்கூடிய பணிகளாகும். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினுடைய Material and Component பணிகள் என்று குறிப்பிடுகையில், நல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ. 1,47,000 செலவில் சுற்றுச்சுவர் முழுமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதே போல், நாககன்னியபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு ரூ.3,90,000 செலவில் முழுமையாக சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. நல்லூர் ஊராட்சியில் செலவில் விளையாட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. நல்லூர் ஊராட்சியில் உள்ள துவக்கப்பள்ளியின் இன்னொரு பகுதியில் ரூ.1,47,000 செலவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், பெரும்பாலும் நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய எல்லா பள்ளிகளுக்கும் சுற்று சுவர் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. ஏன் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்? என்றால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மற்றொன்று பள்ளிக்கூடங்களில் உள்ள பொருட்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்டப்படுகிறது. மேலும், 2023-24 நிதி ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 7 முக்கிய பணிகள் எடுக்கப்பட்டு, அனைத்து பணிகளும் 2 ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்கப்பட்டது. 

அதில் நாககன்னியபுரத்தில் ஒரு அங்கன்வாடி மையமும், அதேப் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சமையல் கூடமும், வடக்கு நல்லூர் பகுதியில் உள்ள மயானத்தில் காத்திருப்பு கூடமும், கொளையகநாதபுரத்தில் பேவர் பிளாக் சாலையும், நாககன்னியபுரம் முதல் தெருவில் 140 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலையும், குரங்கன்தட்டு தெற்கு தெருவில் 85 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலையும், நாககன்னியபுரத்தில் உள்ள இசக்கியம்மன் கோவில் தெருவில் 101 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலை என அனைத்து பணிகளும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதற்கு முன் உள்ள ஆண்டில் நிதிக்குழு மானியத்தின் கீழ் மொத்தம் 14 பணிகள் என பல்வேறு பணிகள் எடுக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கிறது. 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 2021-22-ல் மொத்தம் 23 பணிகள் எடுத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊராட்சியைப் பொறுத்தவரைக்கும் கடந்த 4 ஆண்டுகளில் சற்று ஏறக்குறைய 120 பணிகளுக்கு மேல எடுத்து செய்து முடிக்கப்பட்டுள்ளது. 

திட்டப்பணிகள் என்ற அடிப்படையில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஊராட்சியினுடைய நிதியிலிருந்து ஆங்காங்கே இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சிறு சிறு பணிகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், குப்பைகள் அகற்றுதல் இது போன்ற பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் செய்வதில் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு சமமான முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். 

சில பகுதிகளில் ஒருவேளை ஏதேனும் பணிகள் விடுபட்டிருந்தால், நீங்கள் அதையும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம். அதுபோல், அந்த விடுப்பட்ட பணிகளையும் அதிக கவனம் செலுத்தி எதிர்காலத்தில் நல்லபடியாக செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம். அதைத் தவிர, ஊராட்சிகளுடைய செயல்பாடுகளிலேயோ அல்லது பிற துறைகளுடைய செயல்பாடுகளிலேயோ உங்களுக்கு சில விஷயங்கள் நிறைவேறவில்லை என்றாலும் தெரிவிக்கலாம். அதை பூர்த்தி செய்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்போம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றம் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 1 விவசாயிக்கு மண்புழு உரப்படுக்கையை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழஙகினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, இணை இயக்குநர், மகளிர் திட்டம் நாகராஜன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) பெரியசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகனதாஸ் சௌமியன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory