» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகாராஷ்டிர தேர்தலில் பா.ஜ.க. சரித்திர வெற்றி: தமிழிசை பேட்டி!

சனி 23, நவம்பர் 2024 12:52:09 PM (IST)

"யாராலும் வெல்ல முடியாதவராக பாரத பிரதமர் இருக்கிறார் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது" என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளையும் தாண்டி பாஜக முன்னிலை பெற்றதால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் பலம் பொருந்திய மாநிலம் மகாராஷ்டிரா. சின்ன இந்தியா என்றே சொல்லலாம். பலதரப்பட்ட மக்களும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள மக்களும் கணிசமான மக்கள்தொகையோடு வாழக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா. 

அதனால் பரவலாக பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அது நிருபிக்கப்பட்டு உள்ளது. சில நேரங்களில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும்போது கூட அது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிதான் அந்த மக்களிடம் எடுபட்டு இருக்கும்.

ஹேமந்த் சோரன் ஏதோ தேர்தலுக்காக கைது செய்யப்பட்டது போல கூறுவது தவறு. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. குற்றம் நிருபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். குறைத்து மதிப்பிடவில்லை.

உண்மையிலேயே பாஜக கட்சி போன தடவை இருந்ததைவிட தற்போது ஜார்க்கண்டில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது. 2 மாநிலங்களிலுமே மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இன்று யாராலும் வெல்ல முடியாதவராக பாரத பிரதமர் இருக்கிறார் என்பதையும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory