» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் கோவில் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற முடிவு? தமிழக அரசு விரைவில் நடவடிக்கை!

திங்கள் 1, ஜூன் 2026 8:52:25 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாகக் கூண்டோடு இடமாற்றம் செய்யத் தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இக்கோவிலில் பொதுவாகப் பொதுத் தரிசனம், ரூ.100 கட்டணத் தரிசனம் மற்றும் முதியோருக்கான பிரத்யேகத் தரிசனம் என மூன்று தனித்தனி வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

ஆனால், கோவிலில் உள்ள சில அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து கொண்டு, சாதாரண பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்று, தரிசனத்திற்கு குறுக்கு வழியில் அழைத்துச் செல்வதாகத் தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கடந்த மே 29-ஆம் தேதியன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எவ்வித முன் அறிவிப்புமின்றி, சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, குறுக்கு வழியில் தரிசனத்திற்குப் பணம் வாங்கிய அர்ச்சகர் அய்யப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கோவிலில் பூஜை செய்ய அர்ச்சகர் அய்யப்பனுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் இருவரும் பணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில், அமைச்சர் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகத் தி.மு.க. முன்னாள் அமைச்சரான எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குச் சமூக வலைத்தளத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருந்த அமைச்சர் ரமேஷ், "மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மதப் பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலில் பல காலங்களாக நடந்து வரும் முறேகடுகளை விரைவில் முழுமையாக வெளியே கொண்டு வருவேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்துக் கோவில் அதிகாரிகள் சிலர் தரப்பில் கூறப்படுவதாவது, அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பெற்று குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த முறைகேடான உள்கட்டமைப்புச் செயல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. அர்ச்சகர்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை, உயர் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் அவல நிலை உள்ளது.

100 கட்டணத் தரிசனத்தில் நடந்த முறைகேடுகள் போன்றும், கோவிலுக்குச் சொந்தமான கடைகளில் முறையான வாடகை வசூலிப்பது, சொத்துக்களுக்குச் சரியான வாடகை நிர்ணயம் செய்வது, ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என உயர் அதிகாரிகள் சிலர், கோவில் நிர்வாகத்திற்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

உள்ளூர் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் முழு ஆதரவோடுதான் இவ்வளவு நாட்களும் இந்த அதிகாரிகள் எவ்வித பயமுமின்றிச் செயல்பட்டு வந்தனர். இது தொடர்பான முழு விபரங்களையும் தனது ஆய்வின்போது அமைச்சர் ரமேஷ் ஆதாரங்களுடன் சேகரித்துள்ளார். இதன் அடிப்படையில், விதிமுறை மீறலுக்கு உடந்தையாகவும், துணையாகவும் இருந்த அனைத்து உயர் அதிகாரிகளையும் கூண்டோடு இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யத் தமிழக அரசு தீவிரப் பட்டியலைத் தயார் செய்துள்ளது.


மக்கள் கருத்து

அண்டன் ஜாய்Jun 1, 2026 - 09:02:16 AM | Posted IP 104.2*****

தூத்துக்குடி 2ஆம் கேட் தொடங்கி பக்கில் ஒடை பாலம் வரை செல்லீ அம்மன் கோயில் அருகில் கல் பதிப்பதற்காக ரோட்டில் மூன்றை அடி எடுத்து இருக்கிறார்கள் இதன் மூலம் ரோடு மிக குறுகலாகும். பிளாட்பாரத்தை ரோட்டில் போடுகிறார்கள்.. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும்...‌ இல்லையென்றால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்தப் பகுதியில்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory