» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை: பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது

ஞாயிறு 3, நவம்பர் 2024 9:18:00 AM (IST)



குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்று அங்கு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 16 செ.மீ. மழை கொட்டியது. 

குமரி மாவட்டத்துக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் காலையில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் காய்ந்தது. மதியம் 12.30 மணியளவில் திடீரென வானம் கருமேகக்கூட்டங்களுடன் இருண்டு காட்சி அளித்தது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழைபெய்யத் தொடங்கியது. நாகர்கோவில் மாநகரில் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேநேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தென்தாமரைகுளம், பூவியூர், அகஸ்தீஸ்வரம், முகிலன்குடியிருப்பு, சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்குத்தாமரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் 1 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல சுமார் 3 மணி நேரம் இடி-மின்னலுடன் வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. கன்னியாகுமரி சன்னதி தெருவில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் தண்ணீர் வெளியேறும் மடையில் அடைப்பு ஏற்பட்டு பகவதி அம்மன் கோவிலிலுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக கோவில் ஊழியர்கள் அடைப்புகளை சரி செய்தனர். 

இதையடுத்து சிறிது நேரத்தில் தண்ணீர் வடிந்தது. தொடர்ந்து தண்ணீர் புகுந்த இடங்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

கொல்லங்கோடு பகுதியில் பெய்த கனமழையால் ஏலாக்கரை, பாலபாடம், தேனாந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குலசேகரம், திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் 3 மணி நேரத்திற்கு அதிகமாக கனமழை பெய்தது.

குமரி மாவட்டத்தின் பல இடங்களில் ரப்பர் தோட்டங்கள், வாழைத்தோட்டங்கள், நெல் வயல்கள் போன்றவற்றில் மழை வெள்ளம் புகுந்திருந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரத்தில் கொட்டாரத்தில் மிக கனமழையாக 15.86 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதுபோல் மயிலாடியில் 11.02 செ.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை-27, பெருஞ்சாணி அணை-8.6, சிற்றார்-1 அணை-55, சிற்றார்-2 அணை- 27.6, முக்கடல் அணை- 48, மாம்பழத்துறையாறு அணை-58, நாகர்கோவில்-33.6, கன்னிமார்-38.6, ஆரல்வாய்மொழி-4, பூதப்பாண்டி-30, தக்கலை-85, குளச்சல்-8.6, இரணியல்-32.4, அடையாமடை-62.2, கோழிப்போர்விளை-46.2, ஆனைக்கிடங்கு-57.4, களியல்-20.2, குழித்துறை-48.2, திற்பரப்பு-61.4, முள்ளங்கினாவிளை-32 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அருவியில் குளிக்க தடை

திற்பரப்பு பகுதியில் 6 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 361 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் பாசனத்துக்கும், 344 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் திறந்து விடப்பட்டது. காலை 9 மணியளவில் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 309 கன அடி தண்ணீர் வந்தது. 

அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 510 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து வினாடிக்கு 43 கன அடி வீதம் வரும் தண்ணீர் அப்படியே மறுகாலாக பாய்கிறது.

நெல்லை-தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory