» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம்: ஏப்.5ஆம் தேதி குமரி வருகை!

புதன் 3, ஏப்ரல் 2024 5:31:21 PM (IST)

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (5-ந்தேதி) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த், அ.திமு.க. சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.இதனால் கன்னியாகுமரி தொகுதியில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

பிரதான கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இதனால் கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று மேற்கு மாவட்ட பகுதியில் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது கனமழை கொட்டி தீர்த்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியஜெனிபர், பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தபடி இருக்கின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே.வாசன் ஆகியோர் பிரசாரம் செய்தார்கள்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (5-ந்தேதி) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தக்கலையில் நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அவர் அழகிய மண்டபத்தில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு-ஷோ செல்ல பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். 

தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலைய வரையிலான அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரை கிலோ மீட்டர் தூரமே அமித்ஷா ரோடு-ஷோ சென்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அமித்ஷா பங்கேற்கும் ரோடு-ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அமித்ஷாவின் வருகை குமரியில் திருப்பு முனையாக அமையும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் 11-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் வருகை தர உள்ளதையடுத்து குமரி மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory