» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துளு மக்களின் தெய்வத்தை கேலி செய்ததாக புகார் : பகிரங்க மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:23:07 PM (IST)



துளு மக்களின் தெய்வத்தை கேலி செய்ததாக புகார் எழுந்த நிலையில், நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். 

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிகள் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரம் மற்றும் தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

அப்படிப்பட்ட புனிதமான தெய்வத்தை ரன்வீர் சிங் கேலி செய்யும் விதமாக பாவனை செய்ததாகவும், அதனை ‘பேய்’ என்று தவறாக அழைத்ததாகவும் துளு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டி அதைத் தடுக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.

துளு சமுதாய தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வ சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சமூக வலைதளங்களிலும் ரன்வீருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.

இதனையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், "ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory