» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியலில் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்; இடைத் தேர்தலில் வெல்வதே இலக்கு: சீமான்

ஞாயிறு 22, ஜனவரி 2023 8:24:38 PM (IST)

அரசியலில் சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெல்வதே இலக்கு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக கட்சியின் முதன்மைப் பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறோம். 

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய மாவட்ட முக்கியப் பொறுப்பாளர்களையும், நாளை 23-01-2023 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களையும், 25-01-2023 அன்று புதுக்கோட்டையில் அதனைச் சுற்றியுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களையும், 26-01-2023 அன்று மதுரையிலும் கலந்தாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து 29-01-2023 அன்று ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம் நடைபெறும். பிறகு தேர்தல் பரப்புரையை மேற்கொள்வோம்” என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், ”இந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை, அங்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்துவிடுவோம், அதனால் திமுகவே வெல்லும் என்பது போன்ற விமர்சனங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. எங்களின் நோக்கம் வெல்வது ஒன்றுதான். எங்கள் இலக்கை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கின்றோமே தவிர பிறர் கூறும் விமர்சனங்களை எல்லாம் நாங்கள் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. பிற கட்சிகள் எத்தனைக் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், எங்களுக்கு அதைப் பற்றி எந்த பயமும், கவலையும் இல்லை, நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்.”

"திமுக, அதிமுக பிற கட்சிகளை தங்களோடு சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து, பல கோடிகளைச் செலவழித்து தேர்தலை எதிர்கொள்ளும். ஓட்டுக்கு காசு கொடுத்து மக்களின் வாக்கைப் பறிக்கும். எங்களிடத்தில் கோடிகள் இல்லை, ஆனால் உயர்ந்த கொள்கைகள் இருக்கிறது. அதனைக் கொண்டு நாங்கள் வாக்கு சேகரிப்போம். அதற்கு கடுமையாக உழைப்போம். அதை களத்தில் நீங்களே பார்ப்பீர்கள். பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க சனநாயகத்தைக் காப்பதற்குப் பெயர் தான் புரட்சி. அதை நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.

"நாங்கள் எந்த பின்புலமும் இல்லாத எளிய பிள்ளைகள். பணபலமும் இல்லை, ஊடகத்தின் ஆதரவும் பெரிதாக இல்லை. இந்த நிலையில் தனித்துப் போட்டியிட்டு, வாக்கிற்குக் காசு கொடுக்காமல் மக்களின் நன்மதிப்பைப் பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக வந்ததே பெரிய சாதனை தான். நாங்கள் இன அழிப்பிலிருந்து பிறந்தப் பிள்ளைகள். அதனால் தேர்தல் தோல்விகளுக்கெல்லாம் நாங்கள் துவண்டு போகமாட்டோம். 

அது எங்களின் தோல்வியல்ல, எம் மக்களின் தோல்வி தான். ஒவ்வொரு நாளும் எனக்கு மனுக்கள் வருகிறது, போராட்டத்திற்கு அழைப்பு வருகிறது. பல போராட்டங்களைச் செய்துள்ளோம். இதுவரை எத்தனைப் போராட்டக் கோரிக்கைகள் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தது எங்களின் தோல்வியல்ல மாறாக எம் மக்களின் தோல்வி தான். ஐயா பெரியார் கூறியது போல, அரசியலில் சோம்பலும், ஓய்வும் தற்கொலைக்குச் சமம். அதனால் நாங்கள் அயராது உழைப்போம்” என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

TAMILARKALJan 23, 2023 - 04:04:06 PM | Posted IP 162.1*****

இவன் மிசினரி, மதபோதகர். தன்னுடய வீட்டில் தெரியாமல் ஜெபக்கூட்டம் நடத்தியிருக்கிறான். இவனெல்லாம் மக்கள் பற்றி பேச அருகதை இல்லை.

comedyJan 22, 2023 - 09:34:29 PM | Posted IP 162.1*****

piece of tamilnadu arasiyal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory