» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் படுகொலைகள்: சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - சீமான் குற்றச்சாட்டு

சனி 13, நவம்பர் 2021 10:16:53 AM (IST)

ஒவ்வொரு நாளும் நடைபெறும் படுகொலைகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது என சீமான் விமர்சித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரசியல் கட்சியின் முதன்மை நிர்வாகியைப் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தேனி உத்தமபாளையத்தில் வயதான தம்பதிகள் கழுத்து அறுத்து கொலை, கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை, மதுரையில் உணவக உரிமையாளர் கொலை, மயிலாடுதுறையில் கோயில் காவலாளி கொலை, திண்டுக்கலில் 4 வயது சிறுவன் கொலை, வாணியம்பாடியில் மஜக பொறுப்பாளர் கொலை, சென்னையில் விசிகவை சேர்ந்தவர் கொலை, கன்னியாகுமரியில் ஆதித்தமிழர் ஆணவப் படுகொலை என மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் படுகொலைகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது. 

ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியைப் பகல் பொழுதில் சாலையில் வைத்து சர்வ சாதாரணமாகப் படுகொலை செய்ய முடிகிறதென்றால், எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாப்பின் நிலையென்ன என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆகவே, காவல்துறையைத் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இனியும் இதுபோன்ற படுகொலைகள் தொடராவண்ணம் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, கடும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், இப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

KANNANNov 13, 2021 - 10:54:06 AM | Posted IP 162.1*****

KADANDHA 30 VARUDANGALUKKUM MELAAGA ENA SOLLALAAME..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory