» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்

வெள்ளி 7, மே 2021 3:36:40 PM (IST)



தமிழக முதலமைச்சராக தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

1. கரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.

2. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.

3. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

4. முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப்பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

5. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதலமைச்சர்  ஆணையிட்டுள்ளார். இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.


மக்கள் கருத்து

Balajiமே 12, 2021 - 08:38:17 AM | Posted IP 162.1*****

milk kolmuthal vilaiya 6 rs ethittu athula 3 rs kurachi ennamo kuracha mathuri solranunga.. we have to pay rs 3 additionally now... eppa thillalangadi dmk aramichiteengala unga attatha..

அட்மின்மே 10, 2021 - 07:35:23 PM | Posted IP 46.16*****

அந்த 1200 கோடி யாரு தலைல விழ போகுதோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory