» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் - சீமான்!

புதன் 10, பிப்ரவரி 2021 3:46:23 PM (IST)

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 269 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1500 பேரில் 8 பேர் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இத்தேர்வில் மிகப்பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

தமிழர்கள் சிந்திய குருதியிலும், வியர்வையிலும் உருவான இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வ குடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுக்கொடுத்தனர். ஆனால் இன்று அதே நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், அடிமாட்டு கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக உள்ளது. 

இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் பதவிகளிலும் தமிழர் அல்லாதவரே அதிகாரிகளாக நியமிக்கப்படும்போது இயல்பாகவே தமிழர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுவது கண்கூடு. இன்றளவும் இந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்குப் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், என்எல்சி-யில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பணி வழங்கப்படாமலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு செயல்பாடானது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

அதனை நிறுவுகின்ற வகையில் அண்மையில் நடைபெற்ற பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட 1500 பேரில் 8 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது முழுக்க முழுக்க என்எல்சி நிர்வாகத்தின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக என்‌எல்‌சி நிர்வாகம் மீது பல்வேறு நிதி, மற்றும் நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது பொறியாளர் தேர்வில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதிலும் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிக்கும் வகையில் ஏற்கனவே தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பூர்வகுடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து உருவாக்கப்பட்ட என்எல்சியிலும் பணிவாய்ப்பினை வடவருக்குத் தாரைவார்ப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறித்துச் சொந்த மண்ணில் அகதிகளாக அடிமையாக்கும் கொடுஞ்செயலாகும். இனியும் இதுபோன்ற தமிழரின் உரிமைகள் கண்முன்னே பறிபோவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகவே மத்திய அரசு, முறைகேடாக நடைபெற்றுள்ள என்எல்சி பொறியாளர்த் தேர்வினை உடனடியாகத் திரும்பப்பெற்று, தேர்வு முறைகேடு குறித்து உரிய நீதி விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழக இளைஞர்களின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க உரிய அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையினைப் பறிக்கும் மத்திய-மாநில அரசுகளின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் அதனை முறியடிக்க மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

TAMILANFeb 16, 2021 - 03:14:54 PM | Posted IP 173.2*****

இவன் வைத்திருக்கிறது கட்சியே கிடையாது, அது ஒரு காமெடி சபா

TAMILAN அவர்களேFeb 13, 2021 - 09:00:44 PM | Posted IP 162.1*****

அப்போ மற்ற திருட்டு கட்சிகள் எல்லாம் டுபாக்கூர்

TAMILANFeb 11, 2021 - 03:46:55 PM | Posted IP 162.1*****

இந்த கோமாளி தமிழனே கிடையாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory