» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழ் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஞாயிறு 15, நவம்பர் 2020 9:59:30 AM (IST)

தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு, "தமிழுக்குத் தனியொரு விதி” உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுவும் கூட அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு "தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்”, "வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்”, "ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடவேண்டும்” என்றெல்லாம் கடும் நிபந்தனைகளை விதித்து அன்னைத் தமிழின் மீது அகிலம் போற்றும் செம்மொழி மீது, வெறுப்பைக் காட்டியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. வெறுப்புணர்வை கக்கும் இந்த நிபந்தனைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் தமிழுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழ் பயிற்றுவிப்பதுகூட 6-ம் வகுப்பில் இருந்துதான் தொடங்கவேண்டும் என்று, தாய்மொழியை கற்பதற்கு எதிரான ஒரு நிரந்தரத் தடையை விதித்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழக மாணவர்களுக்கு பயன்பட்டுவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைப்பது, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கும், தமிழ்மொழிக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.

6-ம் வகுப்பில் இருந்துதான் தாய்மொழி கற்றுக்கொடுக்கப்படும் என்ற இந்த விதி, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கே விரோதமாக இருக்கிறது. "தாய்மொழி கற்றுக் கொடுக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது”; "5-ம் வகுப்பு வரை தேவைப்பட்டால் 8-ம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்”என்று புதிய கல்விக் கொள்கையில் அறிவித்தது, இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சக எண்ணத்துடன் ஏமாற்றுவதற்கு என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

அதனால்தான் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்திவருகிறது. இந்தியை சமஸ்கிருதத்தைத் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிக்க மேற்கொண்ட பகட்டு அறிவிப்பான பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையின் பச்சோந்தித்தனம், இப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மட்டுமே தாய்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்பதில் உறுதியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பலவற்றிற்கு, தமிழ்நாடு அரசுதான் நிலம் கொடுத்துள்ளது. அங்குதான் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கே இந்தப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுவிக்கப்பட மாட்டாது என்பதில் இருந்து, தமிழ் மீது பாசமாக இருப்பதுபோல் போட்ட பா.ஜ.க.வின் வேடம் கலைந்து விட்டதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆகவே, தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என்று குறிப்பாக, புதிய கல்விக்கொள்கையைப் புகழ்ந்து தாய்மொழியில் கற்பது அந்த கொள்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வாக்குறுதி அளித்த மத்திய கல்வித்துறை மந்திரியை கேட்டுக்கொள்கிறேன்.

அந்தப் பள்ளிகளில், தமிழகத்தில் உள்ள தமிழாசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமித்து, மற்ற வகுப்புகள் போல் ஒவ்வொரு நாளும் தமிழ் வகுப்புகள் நடத்தப்படவேண்டும் என்றும்; எக்காரணத்தைக் கொண்டும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகள் நடத்துவதை நிறுத்திவிடக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் வைக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழ் மீது அனாவசியமாக கைவைக்க வேண்டாம். மீண்டும் ஒரு போராட்டக் களத்திற்குத் தமிழகத்தைத் தள்ளிவிடவேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

மணியன்Nov 15, 2020 - 02:48:21 PM | Posted IP 173.2*****

திரு. ஸ்டாலின் அவர்களே. இது சமூக ஊடகங்கள் காலம். ஈ.வெ.ரா காலம் அல்ல. உங்கள் தந்தை கருணாநிதி காலம் அல்ல. இனி உங்களின் பொய்யும், புரட்டும் எடுபடாது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பயிற்றுவிக்க மத்திய பாஜக அரசு நிபந்தனைகள் விதிப்பதாகவும், அதுவும் 6-ம் வகுப்பிலிருந்து தான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இன்று (நவம்பர் 13) அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என்பது மாநிலத்தை விட்டு மாநிலம் பணியிட மாறுதலுக்கு ஆளாகும் மத்திய அரசுப் பணியில் உள்ள ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பள்ளிக் கூடம். அதனால் தான் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பயிற்று மொழியாக ஆங்கிலமும், 2-வது மொழிப்பாடமாக இந்தியும் உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் மதுரைக்கு பணியிட மாறுதல் பெற்றால் அவரது குழந்தை பஞ்சாபில் படித்தது போலவே, தமிழகத்தின் மதுரையில் படிக்கவே இந்த ஏற்பாடு. அங்கு பஞ்சாபி பயிற்று மொழியாகவோ, 2-வது மொழிப்பாடமாகவோ இருந்தால் அவரது குழந்தையில் தமிழகத்தில் படிக்க முடியாது. அதுபோல தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் பஞ்சாப், மேற்கு வங்கம் என்று எந்த மாநிலத்துக்கு பணியிட மாறுதல் பெற்றாலும் அவரது குழந்தை எந்தச் சிரமும் இன்று படிக்கவே கேந்திரிய வித்யாலயாவில் நாடு முழுவதும் பயிற்று மொழி ஆங்கிலம், 2-வது மொழிப்பாடமாக இந்தி வைக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பிலிருந்து 3-வது மொழி கற்பிக்கப்படுகிறது. முன்பு ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழி இருந்தது. இப்போது சமஸ்கிருத மொழியும் உள்ளது. தமிழ் போன்ற மாநில மொழிகள் இல்லை. ஆனால், மத்திய பாஜக அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-வது மொழியாக தமிழை அறிமுகம் செய்கிறது. 3-வது மொழிக்கு இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளே இப்போதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், முதல் முறையாக தமிழ் மொழியை கொண்டு வந்துள்ள பாஜக அரசை பாராட்ட மனமில்லாத திரு. ஸ்டாலின், ஏற்கனவே உள்ள நிபந்தனைகளைக் கூறி வசை பாடியுள்ளார். தமிழை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் ஸ்டாலின், மத்தியில் 1996-லிருந்து 2014 வரை இடையில் சில ஆண்டுகள் தவிர மத்திய அரசில் செல்வோக்கோடு இருந்த திமுக ஏன், கேந்திரிய வித்யாலாவில் தமிழைக் கொண்டுவரவில்லை. மத்திய அமைச்சரவையில் இருக்கும்போது குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு விட்டு இப்போது பிரதமர் நரேந்திர மோடி அரசை குறை கூறி திரு. ஸ்டாலினுக்கு எந்தக் தகுதியும் இல்லை. கேந்திரிய வித்யாலயா மீது ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டை கேந்திரிய வித்யாலயா மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்துவாரா? அதற்காகப் போராடுவாரா? அதுவும் அரசுப் பள்ளி தானே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory