» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்!

வெள்ளி 28, ஆகஸ்ட் 2020 12:33:13 PM (IST)

தமிழரின் தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் - மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்ககாலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது. அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13000 பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

பழங்கால சிறப்புகளை மண்ணில் புதைத்து வைத்திருக்கும் அழகன்குளம் ஆற்றங்கரை பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து மீத்தேன் எரிவாயு ஆய்வு மேற்கொள்ள முனைந்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த முகத்துவாரத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. 

தற்போது கரோனா காலத்தில் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மத்திய அரசின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி மீண்டும் இந்தப் பகுதியில் மீத்தேன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முனைந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டு வாழ்க்கையையும், கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் நடத்திய வணிகத்தையும் பறைசாற்றும் ஆதாரங்கள் புதைந்து கிடக்கும் அழகன்குளம் பகுதியை ஓஎன்ஜிசி எரிவாய்வு ஆய்வுப் பணிகள் மூலம் சிதைத்து விட ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

மேலும் கடலோடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு ஆய்வுப் பணிகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். அழகன்குளம் ஆற்றங்கரை பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory