» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

முதல்வராக விருப்பமில்லை: மக்களின் எழுச்சிக்கு பிறகே அரசியலுக்கு வருவேன்: ரஜினி அறிவிப்பு

வியாழன் 12, மார்ச் 2020 5:30:26 PM (IST)

முதல்வராக விருப்பமில்லை; மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியலின் அடுத்தகட்ட நகர்வு குறித்து விளக்கினார். அரசியல் மாற்றத்திற்கான தனது 3 திட்டங்களை முன்மொழிந்தவர், இறுதியாக திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல் எழுச்சி உருவாக வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

3 திட்டங்களை முன்மொழிந்து பேசிய ரஜினிகாந்த், "மாற்றத்தை விரும்பும் மக்கள் இதனைத்தான் விரும்புவார்கள் என நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். என்னுடைய திட்டத்தை பலரும் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியில் பதவிக்காக வருபவர்கள் எனக்கு வேண்டவே வேண்டாம். நான் முதல்வர் பதவிக்கு வரமாட்டேன் என்று சொன்னதை நிர்வாகிகள் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், என்னுடைய எண்ணம் ஒரு மாற்று அரசியலை கொண்டுவர வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்தார்.

"திமுக, அதிமுக என்னும் இரண்டு அசுர பலம் பொருந்திய ஜாம்பவான்களை எதிர்க்கப்போகிறோம். ஒரு பக்கம் திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. மிகப்பெரிய ஆளுமை மிக்கத் தலைவர் கலைஞர் இப்போது இல்லை. கலைஞரின் வாரிசு என தன்னை நிரூபிக்க வேண்டிய வாழ்வா, சாவா நிர்பந்தத்தில் ஸ்டாலின் உள்ளார். பணபலம், ஆள்பலம், கட்டமைப்பு பலம் உள்ளதால் திமுக எந்த யுக்தியும் செய்யும்.இன்னொரு பக்கம் ஆட்சியையும், குபேரன் கஜானாவையும் கையில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய கட்டமைப்பு பலத்தோடு அதிமுக காத்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

இவர்களுக்கு நடுவில் சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றிபெற முடியுமா? என்னுடைய கொள்கைகள் எடுபடவில்லை என்றால் என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்கியது போல இருக்காதா? என்றெல்லாம் தனக்குத் தானே வினா எழுப்பிக் கொண்ட ரஜினி, "தேர்தலில் திமுகவுக்காக 30 சதவிகிதம் ஓட்டுபோட்டார்கள் எனில் கலைஞருக்காக 70 சதவிகிதம் வாக்குகள் வந்தன. அதிமுகவில் ஜெயலலிதாவுக்காகத்தான் 70 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இரண்டு ஆளுமைகளும் இல்லாததுதான் தற்போது வெற்றிடம். 54 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களை அகற்றுவதற்கு இதுதான் நேரம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போதுதான் அரசியலுக்கு வரும் தருணம்.

மக்களிடையே எழுச்சி உருவாக வேண்டும். அப்படி எழுச்சி ஏற்பட்டால் பணம், கட்டமைப்பு என அனைத்தும் உடைந்துவிடும். அதனைத்தான் நான் விரும்புகிறேன். எழுச்சி உருவாகும் என நம்புகிறேன். ஏனெனில் தமிழகம் புரட்சி உருவாகிய மண். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், மாநிலக் கட்சி ஆட்சி புரிந்த ஒரே மண். 1967ஆம் ஆண்டு நடந்த புரட்சி 2021 இல் மீண்டும் நடைபெற வேண்டும். நான் சொன்னதை மூலை முடுக்கெல்லாம் ஊடகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் புரட்சி எனக்குத் தெரிய வேண்டும். அப்போது நான் அரசியலுக்கு வருவேன். இந்த புரட்சி இந்தியா முழுக்க பரவ வேண்டும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்பது இப்போது இல்லை எனில், இனி எப்போதுமே இல்லை” என்று குறிப்பிட்டு தனது ஒரு மணி நேரம் உரையை நிறைவு செய்தார்.


மக்கள் கருத்து

JaikumarMar 27, 2020 - 10:23:47 PM | Posted IP 173.2*****

Eppa entha aluku ethu thavaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory