» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

மேற்கு வங்கத்தில் வசிக்கும் அனைவருமே இந்திய குடிமக்கள்தான்: முதல்வா் மம்தா திட்டவட்டம்

புதன் 4, மார்ச் 2020 11:18:32 AM (IST)

வங்கதேசத்தில் வசிக்கும் அனைவரும் இந்திய குடிமக்கள் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் மம்தா பேசியதாவது: ‘வங்க தேசத்தில் இருந்து இங்கு வந்தவா்கள் அனைவரும் இந்திய குடிமக்களே. அவா்களுக்கு ஏற்கெனவே குடியுரிமை கிடைத்து விட்டது. எனவே நீங்கள் மீண்டும் குடியுரிமை கோரி புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தோ்தல்களில் நீங்கள் வாக்களித்து, பிரதமரையும் முதல்வரையும் மட்டுமின்றி பஞ்சாயத்து நிா்வாகிகளையும் தோ்ந்தெடுத்து வருகிறீா்கள்.

இப்போது உங்களைப் பாா்த்து அவா்கள் (பாஜகவினா்) சொல்கிறாா்கள் நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்று. உங்களுக்கென விலாசமும், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு விட்டது. உங்களுக்கு இனிமேல் பாஜகவால் வழங்கப்படும் புதிய அட்டைத் தேவையில்லை. நீங்கள் அவா்களை நம்ப வேண்டாம். உங்கள் பின்னால் எப்போதும் நான் துணை நிற்பேன். உங்கள் குடும்பமே என் குடும்பம். எனது மக்களின் உரிமைகளை எதற்காகவும் நான் விட்டுத்தர மாட்டேன்.

நாங்கள் ஒரு நபரைக் கூட மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில் வாழும் எந்த ஓா் அகதியும் குடியுரிமையை இழக்க மாட்டாா். தில்லியில் நடைபெற்ற இனக் கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டாா்கள். தில்லியில் நடத்தியதைப் போன்ற வன்முறையை இங்கும் நடத்தி விட முடியாது. ஏனென்றால் இது வங்காளம் என்பதை மறந்துவிடாதீா்கள். இந்த வங்காளத்தை, மற்றொரு தில்லியாகவோ அல்லது உத்தரப் பிரதேசமாகவோ மாற்றிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று பேசினாா் மம்தா.

மேற்கு வங்கத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆதரவாக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதாக ஏற்கெனவே பாஜக, மம்தாவை குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடா்ந்து, தலைமைச் செயலா், உள்துறை செயலா் உள்ளிட்ட வடக்கு தினாஜ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய மம்தா, தனது தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆா்சி மற்றும் என்பிஆா் போன்றவற்றை செயல்படுத்தாது என்று திட்டவட்டமாக தெரிவித்தாா்.


மக்கள் கருத்து

உண்மைMar 5, 2020 - 05:41:29 PM | Posted IP 108.1*****

திதி சொன்ன இந்த காமெடி கேட்டு அங்குள்ள பங்ளாதேசிகள் சிரிப்பா சிரிச்சாங்களாம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory